Thursday, November 17, 2016

இப்போது வயக்காட்டு பொம்மைகள் யார் ? பதில்சொல்லுங்க ஆளும்கட்சிகாரர்களே !!





இப்போது வயக்காட்டு பொம்மைகள் யார் ?

பதில் சொல்லுங்க !! ஆளும்கட்சிக்காரர்களே !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
மாலை வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

(குறிப்பு :-  இந்த செய்தி, கட்டுரை, அதில் இடம் 
பெற்றுள்ள கதாபாத்திரங்கள், நடைபெற்றதாக 
சொல்லப்படும் சம்பவங்கள், இவை அனைத்தும் 
எமது கற்பனையில் உதித்த காட்சிகளின் பதிவு 
வெளிப்பாடுதானே அன்றி, யாரையும், எவரையும் தனிப்பட்ட முறையில் நினைவு படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்லவே அல்ல. இது உண்மை.)

கடல் சூழ்ந்த அவ்வுலகத்தில், ஒரு தீபகற்ப 
நாட்டின் தென்கடைக்கோடியில் உள்ள ஒரு 
மாநிலம். மொழியின் பெயரால் அமைந்தது.
விதிவசத்தாலோ அல்லது யார் செய்த சதி
வசத்தாலோ, ஒரு கொடுங்கோன்மை 
குணம் மட்டுமே கொண்ட ஒருத்தி மீண்டும் 
நான்காம் முறை, அந்நாட்டின் ஆளும் தலைமை 
பொறுப்புக்கு (வஞ்சக செயல்கள் பல செய்து )
வந்தார். சென்ற முறை அவருக்கு இருந்த 
மிருக பலம்,தற்போது அதே மிருகபலத்தோடு ஆளும் கட்சியாக அவர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட வில்லை. பார்டர் லெவல் மட்டுமே. ஆனால் இதுவரை அந்த நாடு காணாத அளவிற்கு அதிக, மிகமிக அதிகஎண்ணிக்கையில்எதிர்க்கட்சியை 
சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத, அந்த கொடுங்-
கோண்மை குணம் கொண்ட அவள், தான் 
பொறுப்புவகிக்கும் துறை சார்ந்த மானியக் 
கோரிக்கை விவாதம் வர உள்ள நேரத்தில்,
அந்த விபரமான எதிர்கட்சியை எப்பாடு பட்டாவது வேளியேற்றவேண்டும் என்ற சதித்திட்டத்தோடு தனது கட்சியின் பிரதிநிதியை கூப்பிட்டு, நான் சொல்வதுபோல எதிர்கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு தாக்கிபேச வேண்டும் உடனே அவர்கள் கோபமடைந்து அவையை வழிநடத்தும் கோணவாய்நாயகரிடம் 
கோபமாக முரண்டு பிடித்து பேசுவார்கள், அதையே காரணம்காட்டி, அவர்களை அந்தக் கூட்டத்தொடர்  முழுவதும் விலக்கி வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். அந்த உறுப்பினர் இப்படி பேசினார்.

இங்கே எதிர்க்கட்சிவரிசையில் அமர்ந்துள்ள அத்தனை உறுப்பினர்களும் 

" வயக்காட்டு பொம்மைகள் " 

என்று பேச, அந்த கொடுங்கோன்மை குணம் படைத்தவள் நினைத்தபடியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபத்தில் அவையிலேயே அமர்ந்து தர்ணா செய்திட, இதையே காரணம் 
காட்டி அன்று சபைக்குவந்தவர்கள்,வராதவர்கள் 
என்று அத்தனை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து அவளை மகிழ்வித்தார் அந்த கோணவாய் நாயகர். இது நடந்து ஐம்பது நாட்கள் கூட முடிவு பெற்றிருக்காது. எந்த பொம்பள இந்த சதித்திட்டம் தீட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வயக்காட்டு பொம்மைகள்  என்று கேவலமாக பேச வைத்தாளோ,அவளுக்கு ஆண்டவன் கட்டளையாக, திடீரென்று ஒருநாள் இரவு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு, அந்த நாட்டின் மிகப்பிரபலமான மருத்துவமனை 
ஒன்றினில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. அந்த சர்வாதிகாரி, சதிகாரி, இதுவரை எந்த நிலையில் இருக்கிறாள், பேசுகிறாளா, இல்லை கோமா நிலையிலேயே இருக்கிறாரா, யாராவது அவளை நேரிடையாக சென்று பார்த்தாரா, அல்லது அவரது நிலையை ஒரு புகைப்படமோ அல்லது வீடியோ காட்சியோ, இதுவரை எடுத்து, அதை அந்நாட்டு பத்திரிக்கையிலோ அல்லது ஊடகங்களிலோ 
வெளியிட்டார்களா என்றால் இல்லை. ஒரு வினோதமான நாடுதான் அது, இப்போது ஆட்சி,நிர்வாகம் அத்தனையும் யாரிடம் இருக்கிறது, யாரால் செயல்படுத்தப்படுகிறது,
எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

       " முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " 

என்ற அந்த முதுமொழிக்கு இணங்க, யாரை வயக்காட்டு பொம்மைகள் என்று இவள் அழைத்தாளோ, அழைத்திடச் சொன்னாளோ
அவளே இன்று படுத்த படுக்கையாக, ஒரு நடைபிணமாக,கோமா நிலையில் இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் அழைத்திட பயப்படும் சூழலில் இவள் இன்று மூச்சு மட்டும் விட்டுக்கொண்டு உயிர் ஊசலாடும் நிலையில் 
இருக்கிறாள். இப்போது அந்த நாட்டை ஆளும் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதும் கேள்விக்குறியே.

இப்ப பதில் சொல்ல வேண்டியது அந்நாட்டு ஆளும்கட்சி  உறுப்பினர்கள்தான்:-

யார் தற்போது பொம்மையாக இருக்கிறார்கள் ?
என்பதே. இவர்களால் எந்த பதிலும் சொல்ல இயலாது.வாயிருந்தும் ஊமைகளாக, செவி இருந்தும் செவிடர்களாக,கண்கள் இருந்தும் குருடர்களாக அந்த கொள்ளைக்கரக்கும்பல் இப்போது ஆளும் பொறுப்பில் அமர்ந்துள்ளது.

எப்போது தாலி அறுந்துபோகும் என்ற கேள்விக்கு பதில், எல்லாம் வல்ல இறைவனிடம் மட்டுமே இருக்கிறது. பதில் கிடைக்கும்வரை, பொறுத்திருப்போம்என்று பொறுப்புள்ள அந்த எதிர்க்கட்சி காத்திருக்கிறது.

நாமும் அதுவரை காத்திருந்தால் என்ன ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.


Sunday, August 28, 2016

கடிதம் மட்டும் எழுதிவிட்டால் போதுமா ? கடமை அங்கே முடிந்ததென்று அர்த்தமா ?




 கடிதம் மட்டும் எழுதிவிட்டால் போதுமா ? 
கடமை அங்கே முடிந்ததென்று அர்த்தமா ?



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள் உரியதாகட்டும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


இன்று நம் நாட்டில், எந்தப்பிரச்சினை ஆகட்டும்.
ஆளும் தலைமை பொறுப்பில் இருக்கின்றவர் 
உடனே இந்திய தலைமைஅமைச்சருக்கு (பிரதமர்) ஒரு கடிதம் எழுதிவிட்டு, கோப்புக்களை குப்பைத்தொட்டியில் தூர வீசி எறிந்துவிடும் காட்சிகளை மட்டுமே நாம் காண்பது என்பது அன்றாட நிகழ்வுகளாக 
ஆகிப்போச்சு. 

எல்லாம் தமிழனின் தலைஎழுத்து.
வேறு நான் என்ன சொல்ல ? 

குருடனை பிடித்து வந்து அவனை ராஜ முழி 
முழிடா ? என்றால் அவனால் அது எவ்வாறு 
சாத்தியம் ?.

அதுபோல ஆட்சி, அதிகாரம், அரசியல் இந்த 
மூன்று விஷயங்களிலும் எந்தவிதமான முன் 
அனுபவமோ, ஆளும் திறனோ எதுவுமே இல்லாத ஒருவரை, ஒரு அரசியல் விபத்து காரணமாக இன்றைக்கு ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜீவ்காந்தி துர்மரணத்தை துருப்புச் சீட்டாகப் 
பயன்படுத்தி ஆளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஒரு திரை உலகத் தாரகையிடம் நாம் அரசியல் அனுபவத்தை, சாதுரியத்தை, சாணக்கியத்தனம் 
நிறைந்த நடவடிக்கைகளை,  எதிர்பார்த்தால் 
அது நிச்சயம் நடக்கவே நடக்காது.

அதனால்தான் கடிதம், எதற்கெடுத்தாலும் கடிதம் என எழுதி,எழுதி, காலம்,நேரம் அத்தனையையும் வீணாக்கி, பாழடித்து தமிழர்களின் எதிர்கால கனவுகள் 
அனைத்தையும் குழிதோண்டி மண்ணில் புதைக்கப்படும் காட்சிகள், இங்கே ஒவ்வொன்றாக அரங்கேறி வருவதை நாம் பார்த்திட முடிகிறது. 

எல்லாம் விதியின் விளையாட்டு. தமிழனின் தலை எழுத்து.வேற நான் என்ன சொல்ல ? சொல்ல முடியும் ?

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !! சொந்த நாட்டிலே !!

என்ற பாடல் வரிகள்தான் எனது நினைவின்பால் 
எழுகின்றது.

தமிழர்களின் வாழ்வில் கூடிய சீக்கிரம் விடியல்
ஏற்பட உதய சூரியன் எழுந்து வரவேண்டும் என்று கூறி விடை பெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, July 25, 2016

இன்று ( 26-07-2016) தத்துவங்களின் வித்தகர் மறைந்த ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்த தேதி !! அவர் உதிர்த்த சில தத்துவ முத்துக்கள் !!






               " ஜார்ஜ் பெர்னாட்ஷா "



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
எனது காலை வணக்கங்கள்.

இன்றையதினம் தத்துவங்களின் வித்தகர் 
மறைந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் பிறந்த 
தேதி ஆகும். நூற்றாண்டுக்கு முன்பாக அவர் பல்லாயிரக்கணக்கான தத்துவங்களை இந்த பூவுலகிற்கு விட்டுச்சென்று உள்ளார். அவற்றுள் நான் மிகவும் இரசித்த, எனக்கு மிக மிக பிடித்த ஒன்றிரண்டு தத்துவங்களை என் அன்பு வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து 
கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

1)  Eleven Fools are playing and Eleven thousand 

Fools are watching.


2)  The last resort of scoundrels is Politics.


அதாவது :-

1)  பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை 
பதினோரு ஆயிரம் முட்டாள்கள் பார்த்துக் 
கொண்டிருக்கிறார்கள்.

2)  அயோக்கியர்களின் கடைசி புகலிடம்தான் 
அரசியல்.

ஜார்ஜ் பெர்னாட்ஷா மறைந்து நூற்றாண்டுகள் 
கடந்த பின்பும் அவர் இந்த பூவுலகிற்கு விட்டுச் 
சென்ற தத்துவ முத்துக்கள்தான் எவ்வளவு 
அர்த்தம் பொதிந்த உண்மை சொற்றொடர்களாக 
இன்றளவும்இருக்கின்றன.

இன்றைக்கு மட்டைப்பந்து ( Cricket) விளையாட்டு 
நமது நாட்டு சிறுவர்கள் முதல் இளைஞர்கள், 
பல்இழந்த முதியவர்கள் வரை அவர்கள் அனைவரையும்  எவ்வளவுதூரம் அடிமைகளாக ஆக்கியுள்ளது. இதில் பணம் பெற்றுக்கொண்டு சூதாட்டம் வேறு. நாடு எப்படி முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியும்?இதற்கு இந்த நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு வேறு. மக்கள் முட்டாள்களாக இருக்கும்வரை மட்டும்தானே அரசியல்வாதிகளின் ஆட்டமும் இருக்கும். இருபது ஓவர் விளையாட்டு என்றால் பாதி நாள் வேலை கெட்டு குட்டிச்சுவர் ஆவதும்,50 ஓவர் விளையாட்டு என்றால் ஒரு நாள் முழுதும் மக்களை முழு சோம்பேறிகளாக ஆக்கிவிடும் என்ற ஒரே காரணத்தால்தான் உழைப்பால் முன்னேறிய ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில்  இந்த விளையாட்டிற்கு தடை 
போடப்பட்டு உள்ளது அன்பர்களே.

அதே போல இரண்டாவது தத்துவமான 
" அயோக்கியர்களின் கடைசிபுகலிடம்அரசியல் "
என்பதும். 

இன்றைக்கு நாட்டில் நடைபெற்றுக் 
கொண்டிருக்கும் அநியாயங்களுக்கும் லஞ்ச 
லாவண்ய அக்கிரமங்களுக்கும், பொதுமக்கள் 
வியர்வை சிந்தி சம்பாதித்து கட்டும் வரிப்பணத்தை கொள்ளையைடுத்து பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து ஆண்டு அனுபவிக்கும் நமது நாட்டு அரசியல்வாதிகளின் நடத்தைகளை அன்றே சொன்னவர் மறைந்த ஜார்ஜ் பெர்னாட்ஷா ஆகும்.

அன்னாரின் பிறந்த தேதியில், அவர் நமக்கு 
விட்டுச்சென்ற தத்துவங்களில் ஒன்றிரண்டை 
எனது வாசகப் பெருமக்களுக்கு காணிக்கை 
செலுத்துவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி 
அடைகிறேன்.

மீண்டும் மற்றுமொரு தலைப்பில் உங்களில் 
அனைவரையும் நன் சந்திக்கின்றேன்.

அதுவரை உங்கள் அனைவருக்கும் இதயம் 
கனிந்த நன்றி கூறி விடை பெறுவது உங்கள் 
அன்பன்,

மதுரை. T.R. பாலு.  வணக்கம் நேயர்களே !!

Tuesday, June 21, 2016

மாமியாரின் சேலைய மருமகன் தானம் தந்தால், நட்டம் மாமனாருக்குத்தானே ?


யாருக்கு இங்கே நட்டம் வரப்போகுது ? எல்லாம் மக்கள் தலைமீதுதானே ?



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!





அன்புடன். மதுரை. T.R. பாலு. 

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் உரித்தாகட்டும். இரண்டு தினங்கள் முன்பாக, சட்டமன்றத்தில், முதல்வர் விதி எண் 110ன் ( மீண்டும் ஆரம்பமாகிவிட்டதடி அரூபத்தின் லீலைகள்) ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உரையாற்றினார். அது என்ன வென்று கேட்டால், சமீபத்தில் ஓசூர் அருகே நடந்த ஒரு திருட்டுக் கும்பலை மடக்கிப் பிடிக்கும்போது நடந்த தகராறில் ஒரு காவல் ஆய்வாளர் காயமடைந்தார் மேலும் ஒரு தலைமைக்காவலர் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அதை ஒட்டி துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மரணம் அடைந்த காவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூபாய் 5 இலட்சம் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ரூபாய் ஒரு கோடி வழங்குவதாகவும் மேலும் தலைமைக்காவலரின் மகள் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் உரை நிகழ்த்தியத்தைக் கேட்டு அவரது கட்சி உறுப்பினர்கள், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள் மிகவும் மன நிறைவோடு இருந்தார்கள். 

இதில் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், ஏன் முதல்வருக்கு இப்படி இந்த திடீர் கரிசனம் ? கேள்வியில் நியாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்த அறிவிப்பு ஏதோ ஒரு உள்நோக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவே அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். அது என்ன என்று கேட்டால், எதிர்வரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதல்வருக்குச்சாதகமாக  நிச்சயம் வராது என்று உளவுத்துறை மூலம் கேள்விப்பட்டு, நிச்சயம் உள்ளே செல்வது உறுதி என்ற நிலையில், மக்கள், காவல்துறை நண்பர்கள் இவர்களின் அனுதாபத்தை பெற்றிடவே இந்த சித்து விளையாட்டு நடத்தி இருக்கலாமோ என்று அவர்கள் கருதுகிறார்கள். 

ஏனென்றால், இதே தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக இதற்கு மேலாக வீரமரணம் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தபோது வராத கரிசனம், இப்போது வருகிறது என்று சொன்னால், விஷயம் உச்ச நீதி மன்றத்தின் இறுதிதீர்ப்பு மட்டுமே என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுவதில் தவறேதும் இருப்பதாக சொல்லிட முடியாது என்கிறார்கள் அறிவில் சிறந்த ஆய்வாளர்கள். உதவி செய்திட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அனால் அதே நேரத்தில், இப்படி சட்ட விதிகள், துறை ரீதியான இழப்பீடுகள், இவற்றின் எல்லைகளைக் கடந்து இவ்வளவு பெரிய தொகை தரப்படுகிறது என்பதைக் கேள்விப்படுகின்றபோது, எனக்கு மறைந்த எனது தந்தையார் அடிக்கடி சொன்ன வாசகம்தான் இங்கே கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது அன்பர்களே. அதுதான் :-

மாமியாரின் சேலைய மருமகன் தானம் தந்தால் நட்டம் மாமனாருக்குத்தானே ?

நன்றி !! வணக்கம் !!


Friday, May 6, 2016

நேற்றைய சென்னை மோடியின் பேச்சு !! அஇஅதிமுக வுடன் உள்ள இரகசிய உறவை வெளிப்படுத்தி விட்டது !!




இரகசிய உறவை வெளிபடுத்திய திரு. மோடி அவர்களின் பேச்சு !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

நேற்றைய தினம் இந்திய பிரதமர் திரு.நரேந்திர 
மோடி அவர்கள், ஓசூர், சென்னை முதலிய 
நகர்களில் தனது தேர்தல் பரப்புரையை அங்கே 
மேற்கொண்டபோது, என்போன்ற அரசியல் 
ஆர்வலர்கள், அவரது பேச்சையும் அந்தப்பேச்சின் உட்கருத்தையும் கூர்ந்து கவனித்தபோது ஒன்றுமிகத் தெளிவாகத் தெரிந்தது.

அது என்னவென்றால், தமிழக முதல்வருக்கும் 
மோடிக்கும் இருக்கின்ற இரகசிய உறவை அங்கே வெளிப்படுத்தும் விதமாகவே மோடியின் பேச்சு அனைத்தும் எல்லா  இடங்களிலும் அமைந்திருந்தது.

அவருக்கு ஒன்றை தெளிவு படுத்திட விரும்புகிறேன்.அது என்னவென்றால், இங்கே ஒன்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒன்றும் பிரதான கட்சி அல்ல. அது ஒரு மடியில் தவழ்ந்து வாழ்ந்து வருகின்ற குழந்தை.

தமிழகத்தில் உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சி காலூன்றிட வேண்டும் என்று நினைத்திருந்தால் திரு. மோடி விமர்சனம் செய்து பேசி இருக்க வேண்டிய கட்சிகள் திமுக மற்றும் ஜெயாவின் அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைப் பற்றியே. ஆனால் அதை 
எல்லாம் அவர் விட்டுவிட்டு, காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைப்பற்றியும் பேசி இருப்பது மட்டுமல்ல, எந்த இடத்திலும் அவர் ஜெயலலிதாவைப் பற்றியோ அவர் நடத்தும் 
அதி அற்புதமான ஊழல் ஆட்சியின் அவலட்சணங்களைபற்றியோ பேசாததில் இருந்து நமக்கு ஒன்று மிகத்தெளிவாகவே புரிகிறது. 

அதுதான் இங்கே கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு  உள்ளது அன்பர்களே.


அதுதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள இரகசிய உறவு என்பது. இப்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. திரு மோடி அவர்கள் இந்த குற்றச் சாட்டிற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை தமிழ்நாடே உற்று கவனித்துக்கொண்டு உள்ளது.

" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "

என்ற தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய பாடலை முணுமுணுத்துக்கொண்டே நான் தொலைகாட்சி பெட்டியை அதன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு தூங்கச் சென்றேன்.

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.


Monday, April 18, 2016

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் !! (இயற்கையாக கூடுகின்ற கூட்டத்திற்கும் பணம் கொடுத்து கூட்டி வருகின்ற கூட்டத்திற்கும்)







இயற்கையாக கூடுகின்ற கூட்டத்திற்கும் 

பணம்தந்து கூட்டுகின்ற கூட்டத்திற்கும் 

உள்ள வித்தியாசம் பாரீர் !!                        

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!                           

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் பரப்புரை தனது உச்சகட்ட நிலையை நெருங்கி உள்ள இந்த வேளையில் நான் இந்தக் கட்டுரையை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!         

ஆளும் கட்சியான அண்ணா திமுக கூட்டம் என்றாலே கேட்கவா வேண்டும் மக்கள் வெள்ளத்திற்கு ? அடேங்கப்பா...எம்புட்டு ஜனங்கள் ? எம்புட்டு செலவுகள் ? ஆடம்பர வளைவுகள் என்ன ? கட்-அவுட்டுகள் என்ன ? மேடை அலங்காரங்கள் என்ன ? அதில் அம்மையார் அவர்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 5 ஸ்ப்ளிட் குளிர் சாதனங்கள் நான்குக்கும் மேலாக ஏர்-கூலர்கள் ( இவர் ஒருவருக்கு மட்டும்தான்) 

மற்றபடி அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் கீழே உள்ள தனி இடத்தில் மொட்டை வெயிலில் மட்டுமே அமர்ந்திட வேண்டும் என்ற நல்லதொரு ஜனநாயகப் பண்பு.

சரி. நாம இப்ப விஷயத்திற்கு வருவோம்.               

திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது தேர்தல் பரப்புரைக்கு வருகின்ற கூட்டம் ஒரு பக்கம்.       

ஆளும் ஆணவத்தலைமை ஜெயலலிதா தேர்தல் பரப்புரைக்கு கூட்டி வருகின்ற கூட்டம் மற்றொரு பக்கம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்!! இதுதான் இன்றைய கட்டுரையின் தலைப்பு           அன்பர்களே.                                                                               

ஆளும் ஆணவத்தலைமை ஜெ கூட்டும் கூட்டத்திற்கு வருகின்ற கூட்டம், சந்தேகம் எதற்கும் இடமில்லாமல், பணம் தந்து அந்தந்த தொகுதி வேட்பாளர்கள்,ஒரு  ஆளுக்கு 3௦௦ முதல் 5௦௦ ரூபாய் வரை கொடுத்து இதற்கு மேலாக ஆளுக்கு இரண்டு தொப்பிகள், குடிதண்ணீர் பாக்கெட்டுகள், மற்றும் பிரியாணி பொட்டலங்கள் இவைகளுக்கு ஆசைப்பட்ட ஏழை ஜனங்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி அங்கே கூட்டத்தை சேர்க்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆகும். இதனால் என்ன ஆகிறது என்று கேட்டால், எந்தவித உணர்ச்சியும் இன்றி தலைமை பேசுகின்றபோது பொம்மைகள் போல தங்கள் தலைஎழுத்தை நொந்துகொண்டு அவர்கள் அமர்ந்திருப்பதை மட்டுமே காண முடிகிறது அன்பர்களே.                                                   

ஆனால், இதற்கு மாறாக, தளபதியின் கூட்டம் பார்த்தால், அங்கே மக்களின் எழுச்சியை, எப்பாடுபட்டாவது இந்த கோணக்கிறுக்கியின் அலங்கோல, அவல ஆட்சியை மாற்றியே தீரவேண்டும் என்ற மக்கள் சக்தியை நம்மால் அங்கே காண முடிகின்றது என்பதே உண்மை.     

எல்லாம் இன்னும் 30 நாட்கள் மட்டுமே. அதன்பின்பு உதயசூரியன் கிழக்குத்திசையில் இருந்து வெளிவந்து இந்த தரம் தாழ்ந்து போன தமிழகத்தை, கடந்த 5 ஆண்டுகளாக நலிந்துபோன, மெலிந்துபோன, நாசமாகிப் போன தமிழ்நாட்டை, மீண்டும் சீர்திருத்தி, நல்லதோர் ஆட்சி திமுகவின் தலைவர் நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில் அமைந்துவிட காத்திருக்கிறது. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.                                                           

ஆயிரம் கைகள் மறைந்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை !!                                                               ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !!                                                                   

என்னும் காவியக்கவிஞர் வாலி எழுதிய பாடல் அதற்கேற்ப தமிழகத்தின் நிலை மாறும் !!               அதுவரை பொறுத்திருப்போம்.                                      

நன்றி !!  வணக்கம் !!                                                           

அன்புடன். மதுரை. T.R. பாலு. 

 

Thursday, March 10, 2016

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ? ( திரு.விஜயகாந்த் முடிவு பற்றிய ஆய்வுக் கட்டுரை )





எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

அந்தக்காலத்தில் மறைந்த கவியரசர் 
கண்ணதாசன் எழுதிய வரலாற்றுச்சிறப்பு 
மிகுந்த ஒரு பாடல் தான் தலைப்பினில் 
நான் குறிப்பிட்டுள்ளது. பாடல் இடம்பெற்ற 
திரைப்படம் ஆலயமணி.

சரி. அதை ஏன் இங்கே,இப்போது குறிப்பிட்டு 
உள்ளீர்கள் என்று நீங்கள் கேட்பதிலும் ஒரு 
பொருள் உண்டு. அது என்னவென்றால்,
தேமுதிக நிறுவனர்விஜயகாந்த்நேற்றையதினம் 
அக்கட்சியினரின் மகளிர் மாநாட்டில் வைத்து 
தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன 
என்பதனை தனக்கே உரித்தான பாணியில் மிக 
அழகாக, " நாத்தழுதழுக்க " உரைத்துள்ளார். தான்எதிர்வரும் தேர்தலில் யாரிடமும் மண்டி போடாது தலை நிமிர்ந்து தனித்தே எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார். மிகவும் நல்லது. இந்த நல்லமுடிவினை இவர் கடந்த 2011ம் ஆண்டிலேயே எடுத்து இருந்தார் என்று சொன்னால், கடந்த 5ஆண்டுகள் தமிழகம் இந்த அளவிற்கு சீர்கெட்டுப் போய் இருந்திருக்காது என்பதே என்போன்ற அரசியல் ஆர்வலர்கள் 
தருகின்ற செய்தி. 

சென்றமுறைவிஜயகாந்த்ஜெயலலிதாவோடு
கூட்டு சேர்ந்து போட்டி போட்டு தமிழகத்தை, 
தமிழர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் மண்ணை அள்ளிப்போட்டார். 

இந்த முறை அவர் தனித்து போட்டி போடுவதன் மூலம் மீண்டும் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மண்ணை அள்ளிப்போட முயற்சிக்கிறார். தான் தனித்து போட்டியிடுவதன் மூலமாக இவர் ஜெயலலிதாவுக்கே தனது 
மறைமுக ஆதரவை வழங்குகிறார் என்பதே உண்மை.

வரலாறு விஜயகாந்த்தை என்றென்றும் மன்னிக்கவே மன்னிக்காது. இவர் இப்படி அறிவித்ததன் மூலமாக யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

முதல் பாதிப்பு மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணிக்கு மட்டுமே. 

இரண்டாவது பாதிப்பு  தட்டில் ஏதாவது பிச்சை 
போடுவார் விஜயகாந்த் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பிஜேபிக்கு. 

இவர்கள் இருவரும் எந்த எண்ணத்திற்கு 
கடைவிரித்துக் காத்துக்கொண்டு உள்ளார்களோ அதில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளார் விஜயகாந்த். இந்த கட்சிகள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றி தேமுதிக கட்சியில் இணையலாம். பாதிப்பு அரசியல் துரோகி 
வைகோ மற்றும் குழந்தை தமிழிசை ஆகிய இருவருக்கு மட்டுமே.

திராவிடமுன்னேற்றக்கழகத்தைபொறுத்தவரை 
இவர் (விஜயகாந்த்) சேர்ந்திருந்தால் இவரது அரசியல் வாழ்க்கை மீண்டும் மலர்வதற்கு, வளர்வதற்கு, வழிவகை கிடைத்திருக்கும். அதனை அவர் இழந்து நிற்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயா ஆட்சியில் மக்கள் பட்ட வேதனையை அவர்கள் மறக்க வில்லை. எனவே பொதுமக்கள், மற்றும் 
கட்சி சாராத வாக்காளர்கள் ஆதரவு திமுகவுக்கு மட்டுமே.இதோடு தேமுதிகவின் வாக்குகளும் சேர்ந்திருந்தால் வெற்றி வாக்குகள் வித்தியாசத்தில் எண்ணிக்கை கூடுதலாக 
இருக்கும். அது இப்போது இல்லை. வெற்றி திமுக பக்கம்என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 

மக்கள் தனித்து போட்டியிடும் விஜயகாந்த்திற்கு வாக்களிக்கும் அளவுக்கு ஞானம் இழந்தவர்கள் அல்ல. கொடுக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் பதவியையேசரிவரநிர்வகித்துதக்கவைத்துக்கொள்ளும் அறிவும் இல்லை அவரிடம் அந்த ஆற்றலும்  இல்லை. துப்பும் இல்லை.
இவரிடமா மக்கள் மாநிலத்தை நிர்வகிக்கும் தலைமைப்பதவியைத் தந்துவிடுவார்கள் ? நிச்சயம் தரவே மாட்டார்கள்.

நான் ஏற்கனவே முன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளதைப்போன்று 
" புதுக்கெட்டிக்காரனுக்கு பழைய திறமைசாலியே மேல் "
என்னும் முடிவிற்குத்தான் தமிழக வாக்காளப்பெருமக்கள்வருவார்கள் திமுகவிற்கு மட்டுமே தங்களது வாக்குகளைத் 
தருவார்கள்.ஆளும்கட்சியாக திமுகவை ஆக்கி அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள். இதில் யாருக்கும் எந்த 
சந்தேகமும் தேவையில்லை.

அன்று MGR திமுகவை உடைத்து வெளியில் வந்து 1976ல்சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் பல 
தெளிந்த அரசியல் கட்சிகளுடன் இணைந்துதான் போட்டி போட்டு ஆட்சியில் அமர்ந்தார். அவரே அப்படி என்றால் கருப்பு MGR என்று விஜகாந்த் மனைவி பிரேமலதா ஆசையோடு 
அழைக்கும் இவரா தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் ? நிச்சயமாக இல்லை. 

அதனால்தான் நான் இந்தக் கட்டுரையில் தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

" கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?"

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா. பாலு.